தாமரைக் கோபுர நிர்மாணமும் மீளாய்வு – சீனாவுக்கு அடுத்த சோதனை
சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும், தாமரைக் கோபுரம் நிர்மாணப் பணி குறித்தும் மீளாய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,
“தாமரைக் கோபுரம் போன்ற கோபுரம், இலங்கைக்குத் தேவையில்லை. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து இந்தத் திட்டம் குறித்துப் பேசவுள்ளதுடன், இதனை மீளாய்வு செய்யுமாறும் கோரவுள்ளேன்.இந்த கோபுரம், துறைமுக அதிகாரசபையின் காணியில் அமைக்கப்படுகிறது. ஆனால், துறைமுக அதிகாரசபையிடம் இதற்கான முறைப்படியான அனுமதிகள் பெறப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த தாமரைக் கோபுரம், பேலியகொடவில் அமைக்கத் திட்டமிடப்பட்டது. பின்னர், முன்னைய அரசாங்கம் அதனைக் கொழும்புக்கு இடமாற்றம் செய்திருந்தது. தாமரை வடிவில், தொடர்பாடல், கண்காணிப்பு, மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்படவுள்ள இந்தக் கோபுரத்தை, சீனாவின் எக்சிம் வங்கி 104.3 மில்லியன் செலவில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.