Breaking News

இனப்படுகொலைக்கு மைத்திரியும் ஆதரவா?

போர்க் குற்றங்கள் தொடர்பான யுத்த சூனிய வலயம் (நோ பயர் சோன்) ஆவணப் படத்தின் சிங்கள மொழியாக்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கையளிப்பதற்கு கெலும் மக்ரே முயன்றபோது மைத்திரிபால சிறிசேன அதனைக் கண்டு கொள்ளாது காரில் ஏறிச் சென்றார். 

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு சென்ற வேளை, சனல் - 4 ஊடக ஆவணப் படத் தயாரிப்பாளரான கெலும் மக்ரேயால் இயக்கப்பட்ட, இலங்கையின் இறுதிக் கட்டப்போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் அடங்கிய "யுத்த சூனிய வலயம்' (நோ பயர் சோன்) ஆவணப் படம் சிங்கள மொழியில் திரையிடப்பட்டது. 

 ஆயினும் ஜனாதிபதி மைத்திரிபால இதனைப் பார்வையிடவில்லை. இந்த நிலையில், சிங்கள மொழியாக்க ஆவணப்படத்தை, பிரிட்டனில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு கெலும் மக்ரே முயற்சித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை கணக்கிலெடுக்காமல் சிரித்துகொண்டே காரில் ஏறிவிட்டார். 

 அதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் அதை வழங்க மக்ரே முயன்றார். அமைச்சர் மங்கள சமரவீரவும், கெலும் மெக்ரேயிடம் ஏதோ கூறிவிட்டு காரில் ஏறிவிட்டார். இதனையடுத்து அங்கு நின்றுகொண்டிருந்த பாதுகாப்பு ஊழியர், கெலும் மக்ரேயை அங்கிருந்து செல்லுமாறு பணிக்க அவரும் அங்கிருந்து அகன்றார். இதேவேளை, கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டின் போது சனல் - 4 ஊடகம் சார்பாக செய்தி சேகரிப்பதற்கு கெலும் மக்ரே இலங்கைக்கு வருகை தந்திருந்தார். 

அப்போது அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவைச் சந்திப்பதற்கு கெலும் மக்ரே முயற்சித்தார். பாதுகாப்பு ஊழியர்கள் மஹிந்தவிடம் அவரை நெருங்க விடவில்லை. இதனையடுத்து சத்தமாக, "உங்களைச் சந்திக்க வேண்டும்' என்று கெலும் மக்ரே கேட்க, மஹிந்த ராஜபக்ச சிரித்துக் கொண்டே காரில் ஏறியதுடன், "வாருங்கள் ஒரு கப் தேநீர் அருந்தலாம்' என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் இறுதி வரையில் அவரும் மக்ரோயைச் சந்திக்கவில்லை.