Breaking News

சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பேச்சு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடத்த முதலாளிமார் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தை இராஜகிரியவில் செவ்வாய்க்கிழமை(24) இடம்பெற்றுள்ளது. 

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையின் போதே, மேற்படி சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான், 'பிரதமர் மட்டத்தில் நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் போது எட்டப்படும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம், எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியாவதால், தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 800 ரூபாவால் அதிகரிக்குமாறு அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.