தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன் - பொன்சேகா
தாம் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடப் போவதாகவும், தனக்கு வழங்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் பதவிநிலை அரசியலில் ஈடுபடுவதற்குத் தடையாக இருக்காது என்றும், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனிய ரஜமகா விகாரையில் நேற்று முன்தினம் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனநாயக நாடுகளில், பீல்ட் மார்ஷல்கள் நாட்டின் தலைவர்களாக இருந்துள்ளனர்.
நான் சீருடையுடன் அரசியலில் ஈடுபடப் போவதில்லை. ஒரு இராணுவ அதிகாரி என்ற வகையில், அதற்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொள்வேன். நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கருதினால், அதில் தலையீடு செய்வேன்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடுவேன். ஐந்து நட்சத்திர இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கப்படும் நாடுகளில் அவர்கள் அரசுத் தலைவர்களாகவும் இருந்திருக்கின்றனர். இராணுவத்தில் நடவடிக்கை மற்றும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடவில்லை என்பதால் அரசியலில் ஈடுபடுவதற்குப் போதிய நேரம் கிடைக்கும்.” என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, 34வது அமெரிக்க ஜனாதிபதியான டிவைற் டி ஐசனோவர், ஒரு ஐந்து நட்சத்திர ஜெனரலாக இருந்தே, அரசுத் தலைவராக வந்தவராவார். அவர், 1952 இலும், 1956 இலும் இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். எகிப்தின் தற்பாதைய ஜனாதிபதி அப்துல் பட்டா எல்-சிசி ஒரு பீல்ட் மார்ஷல். எனினும், அங்கு ஜனநாயகம் குறித்த கேள்விகள் உள்ளன. உகண்டாவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த இடி அமீன் தன்னைத் தானே பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்திக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.