Breaking News

சீன நிறுவனங்கள் மோசடிகளில் ஈடுபடுகின்றன - இலங்கை குற்றச்சாட்டு

சீனாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியால்  கைச்சாத்திடப்பட்ட 5.3 பில்லியன் டொலர் பெறுமதியான திட்டங்கள் தொடர்பில் சமரசப் பேச்சுக்களை நடத்துவார் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது பத்தாண்டு கால ஆட்சியின் போது சீன முதலீட்டில் அதிகம் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதியால் சீனாவுக்கு வாக்குறுதி வழங்கப்பட்ட மிகப் பாரிய திட்டம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், இலங்கையில் செயற்படும் சீன நிறுவனங்கள் பல்வேறு ‘ஊழல் மோசடிகளில்’ ஈடுபடுவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி சீனாவுக்கான தனது பயணத்தை மேற்கொள்வதற்கு முதல்நாள் நிதி அமைச்சர் வழமைக்கு மாறாக இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

‘சீன அரசாங்கம் தூய்மையானது, ஆனால் இலங்கையில் செயற்படும் சீன நிறுவனங்கள் ஊழலில் ஈடுபடுகின்றன என்பதையே நாங்கள் சீன ஜனாதிபதியிடம் கூறிக்கொள்ள விரும்புகிறோம்’ என சிறிசேனவுடன் சீனாவுக்குச் செல்லும் நிதிஅமைச்சர் கருணாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘சீன நிறுவனங்களால் முன்மொழியப்பட்ட செலவீனங்களையும் இவை தொடர்பாக அனைத்துலக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விகிதத்தையும் ஆராய்ந்த பின்னரே நாங்கள் இக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம்’ என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீள்கட்டுமான அபிவிருத்திக்காக சீனாவால் வழங்கப்பட்டுள்ள கடன்தொகைக்கு அதிகளவான வட்டிவீதத்தையே தமது நாடு செலுத்துவதாக இலங்கை  அரசாங்கம் ஏற்கனவே குற்றம்சுமத்தியுள்ளது. இலங்கையில் திட்டங்களை அமுல்படுத்தும் சீன ஒப்பந்தக்காரர்கள் மேலும் அதிகளவான கட்டணங்களை அறவிடுவதாக செவ்வாயன்று கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

‘எமது நாடு ஒரு சிறிய நாடு என்பதையும் பொருளாதார சுயபாதுகாப்பை மேம்படுத்துவதற்கான உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம் என்பதையும் சீனா நன்கு புரிந்து கொண்டுள்ளது. எமது நாட்டின் வரிசெலுத்துனர்களே இந்தச் செலவீனத்தை மீளவும் செலுத்த வேண்டும். இதனால் நாம் எமது சுயபாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் எமது மக்களைப் பாதுகாப்பதற்குமான கடப்பாட்டைக் கொண்டுள்ளோம் என்பதை சீனாவிடம் எடுத்துரைப்போம்’ என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.