மூடப்படுகிறது மத்தல விமான நிலையம்!
மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் ஊடான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரும் ஏப்ரல் 1ம் நாள் தொடக்கம், மத்தல விமான நிலையத்தில் பயணிகள் விமானங்களைத் தரையிறக்குவது முற்றிலுமாக நிறுத்தப்படவுள்ளதாக, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் சஞ்சீவ விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மாதம் 250 மில்லியன் ரூபாவை இந்த விமான நிலையத்தின் பராமரிப்புக்காக செலவிட்ட போதிலும், கடந்த மாதம் இரண்டே இரண்டு பயணிகள் மாத்திரம், இந்த விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், இந்த விமான நிலையத்துக்கு பெருமளவு பணத்தைச் செலவிடுவது நாட்டின் கடன் சுமையை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இங்கு பணியாற்றும் 450 அதிகாரிகள், இரத்மலானை மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
இதன் பின்னர், அனைத்துலக விமான பராமரிப்பு மற்றும் சரக்கு செயற்பாட்டு நிலையமாகச் செயற்படவுள்ளது. இந்த விமான நிலையத்தில் பயணிகள் விமானங்களைத் தரையிறக்குவது நிறுத்தப்படவுள்ளது குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த விமான நிலையம் ஏற்கனவே இரவு நேரத்தில் மூடப்பட்டு வருவதுடன், பகல் நேரத்திலும் குளிரூட்டிகள், மற்றும் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.