மகிந்தவின் மருமகனுக்கு எதிராக விசாரணை!
உக்ரேனில் உள்ள பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர், உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக விசாரணை நடத்தப்படவுள்ளது.
இவர் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பாக, விசாரணை செய்வதற்கு, அனைத்துலக மட்டக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, இலங்கையின் பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார். தற்போது சீனா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நாடு திரும்பியதும். இந்த விசாரணைக் குழு நியமிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது என்றும் அஜித் பெரேரா குறிப்பிட்டார்.
உக்ரேன் பிரிவினைவாத அமைப்புக்கு எவ்வாறு, எப்போது, யாருக்கு, எந்த வவகையான ஆயுதங்களை, உதயங்க வீரதுங்க பெற்றுக் கொடுத்தார் என்பது பற்றிய உள்ளிட்ட விரிவான விளக்கத்தை உக்ரேன் வெளிவிவகார அமைச்சு, இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவின் மருமகனான உதயங்க வீரதுங்க, இலங்கையின் வெளிநாட்டு இராஜதந்திர விதிமுறைகளுக்கு முரணாக, மகிந்தவின் ஆட்சிக்காலம் முழுவதும், 9 ஆண்டுகளாகத் தூதுவர் பதவியை வகித்திருந்தார். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அவரை நாடு திரும்ப உத்தரவிட்ட போதும், அவர் நாடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.