புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு திரும்ப வேண்டாம்! சுரேஸ் அறிவுரை
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பி வந்த பத்திற்கு மேற்பட்ட தமிழர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தமிழர்களில் அதிகமானோர் கடந்த கால யுத்தம் காரணமாக இலங்கையை விட்டு போனவர்கள். அத்துடன் இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் அவர்களை நாட்டுக்கு திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தன் பேரிலேயே அவர்கள் நாட்டுக்கு திரும்பினர்.
ஆனால் இலங்கைக்கு அவர்கள் புதிய அரசாங்கத்தின் நம்பிக்கையின் பேரில் திரும்பி வந்த போதிலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்ற விதம் அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அவர்கள் இங்கு வந்தவுடன் எதிர்கொள்ளும் அனுபவம் வேறுமாதிரியானதாக காணப்படுகின்றது. இலங்கை மாற்றமடைந்துள்ளது, ஜனநாயகம் மலர்ந்துள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது, அரசாங்கம் மாறியுள்ளது ஆனால் நிர்வாக முறை மாறவில்லை.
அதேநபர்கள் அதே மனோநிலையுடன் அப்பதவிகளில் காணப்படுகின்றனர். என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார். இலங்கைக்கு திரும்ப வேண்டாமென புலம்பெயர் தமிழர்களுக்கு நான் ஆலோசனை வழங்கவிரும்புகிறேன். இங்கு வருவதில் எந்தவித பலனுமில்லை.
10 நாட்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து ஓரு குடும்பம் இலங்கை வந்தது. அவர்கள் விமான நிலையத்தில பல மணிநேரமாக தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை செய்த பின்னர் இறுதியில் அவர்களை விடுவித்துள்ளனர் என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
குறிப்பிட்ட குடும்பம் யாழ்ப்பாணம் சென்ற வேளை, அவர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் பின் தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாங்கள் இலங்கைக்கு வந்தது குறித்து ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது, அங்கும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்றதுடன் அவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
இலங்கையில் உண்மையில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாததால் புலம்பெயர் தமிழர்களை இலங்கைகு வருவதை தவிர்க்குமாறு தான் கடுமைiயான ஆலோசனையை வழங்குவதாவும் அவர் குறிப்பிட்டார்.
புலம்பெயர் தமிழர்கள் இங்கு வந்தால் அவர்களுக்கு எந்தவித பாதுகாப்புமில்லை, மேலே குறிப்பிட்ட குடும்பத்தினரை தனியான ஓரு இடத்திற்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர். அது பொலிஸ் நிலையமுமில்லை. இதன் காரணமாக இலங்கை திரும்பும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை என அவர் குறிப்பிட்டார்.
கடற்புலிகள் அமைப்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 41 வயது பெண் அவரது குழந்தையுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன், உண்மையில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரா என்பது தெரியாது, எனக்கு தெரிந்த அளவில் அவர் ஒரு பிரான்ஸ் பிரஜை, அங்கு பிறந்த எட்டு வயது குழந்தையுடன் இலங்கை வந்தவர்.
அந்த குழந்தையும் எவ்வாறு விடுதலைப்புலியாக முடியும், பகீரதியை பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுடன் பேசுவதற்கு அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும், ஆனால் அவர்கள் அவரை ஜனநாயக வழியில் நடத்தவில்லை, அவர் சட்டத்தரணியொருவரை வைத்திருப்பதற்கு கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.
புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் இந்த நிலை குறித்து நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை. மாறாக புலம்பெயர்ந்த தமிழர்களை இலங்கைக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னைய அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் இந்த விடயங்களை பார்க்கும் விதத்தில் வித்தியாசமுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சமூகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் இந்தவிடயத்தை அணுகவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தான் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.