Breaking News

ரணில் பேரினவாதத்தின் ஒட்டுமொத்த வடிவம் - அனந்தி

இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனோர் தொடர்பில் வெளியிட்ட கருத்து பேரினவாதத்தின் ஒட்டுமொத்த வடிவம் என கடுமையாக சாடியுள்ள வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் பிரதமரின் இக்கருத்து தமிழ் மக்கள் மீது புதிய அரசு எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ்இனம் மீது இலங்கை அரசினாலும் அதன் ஒட்டுக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் மற்றும் இனப்படுகொலைகளிற்கு ஐ.நாவிடம் நீதி கோரி யாழ்.நல்லூர் கந்தன் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்றைய தினம் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. இதில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் எவரும் காணாமல் போகவில்லை எனவும் அவ்வாறு காணாமல் போயிருந்தாலும் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது வெளிநாடுகளில் இருக்கலாம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இது அவரது மிதவாத தனத்தினையும் பொறுப்பற்ற தன்மையையும் காட்டிநிற்கின்றது.

இலங்கையின் முன்னைய ஆட்சியாளர் காணாமற் போனோர் பட்டியலை வெளியிடுவதாக இரு தடவைகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு கூறியிருந்தனர். இதனை புதிய ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவதனை விடுத்து தமிழ் மக்களினை விரக்திக்கு உள்ளாக்கும் கருத்துக்களினை கூறிவருவது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.அண்மையில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறியது போன்று வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டவர்கள் சிறீலங்கா இராணுவத்தின் சப்பாத்து துடைப்பதற்கும் இராணுவ ஜெனரல்கள் மற்றும் சிங்கள அமைச்சர்களின் வீட்டு வேலை சமையல் வேலை செய்வதற்கும் பணிக்கப்பட்டுள்ளதாக எம்மாலும் அறிய முடிகின்றது.


அண்மையில் கூட எனக்கு தெரிந்த ஒருவர் அமைச்சர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார் அங்கே சுய நினைவற்ற நிலையில் முன்னாள் போராளி ஒருவர் அவருக்கு தேநீர் பரிமாறியுள்ளார். இதன் போது அவ் முன்னாள் போராளி தலையை கீழே தொங்க போட்டுக்கொண்டு சுய நினைவற்ற நிலையில் இருந்ததாக என்னிடம் அவர் தெரிவித்துள்ளதாக அனந்தி சசிதரன் தெரிவித்தார்.எமது உறவுகளை கடத்தி வைத்துக்கொண்டும் இவ்வாறு துன்ப துயரங்களிற்குள் உள்ள எம் மக்களிற்கு ஒரு பொறுப்புள்ள பிரதமர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார். கடந்த காலங்களில் ரணில் எமக்கு என்ன செய்தார் என்றும் எமக்கு தெரியும். அவர் எமது விடயத்தில் பொறுப்பற்ற பதில்களை கூறி வருவதனை நிறுத்திகொள்ளவேண்டும்