இந்தியாவின் ஆதரவு எப்போதும் தேவை! சுஸ்மாவிடம் மைத்திரி தெரிவிப்பு
இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், நேற்றுமாலை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சரை, இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா வரவேற்றார்.
அதையடுத்து, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள இலங்கை ஜனாதிபதியின் வதிவிடத்துக்குச் சென்ற சுஸ்மா சுவராஜ், அவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். மைத்திரிபால சிறிசேன இன்று லண்டனுக்குப் புறப்படவுள்ள நிலையில், இந்தச் சந்திப்புக்கு நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த வாரம் இந்தியப் பிரதமரை வரவேற்க இலங்கை தயாராகியிருப்பதாக குறிப்பிட்டார். அத்துடன், இந்தியாவுடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்கு தனது அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளை நினைவுகூர்ந்த மைத்திரிபால சிறிசேன, அதுபோல அனைத்துலக அரங்கில் தொடர்ந்தும் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் மேற்கொள்ளவுள்ள பயணம் தொடர்பான ஒழுங்குகரளை மேற்கொள்வதற்காக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், அதிகாரிகள் சகிதம் இலங்கை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.