இலங்கையின் வடகிழக்கில் மருத்துவர்கள் பற்றாக்குறை
இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வைத்திய துறையில் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் பற்றாக்குறை நிலவுவதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை இலங்கையின் மத்திய அராசங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது. யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில் மாத்திரம் கிட்டத்தட்ட மூன்றிலொரு வைத்தியசாலைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறை மோசமான நிலையில் இருப்பதாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வைத்திய நிபுணர்கள், தாதியர், மருந்தாளர்கள் மற்றும் வைத்திய தொழில்நுட்ப பிரிவினர் போன்றோருக்கும் பற்றாக்குறை நிலவுவதாகவும் டாக்டர் சத்தியலிங்கம் கூறுகிறார்.
இதேவேளை, வடமாகாணத்தில் பயணித்துவரும் சுகாதாரத்துறையின் ராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி, மத்திய அரசு இப்பிரச்சினையை உணர்ந்துள்ளது, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
நாட்டின் வடக்கு மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திலும் மருத்துவத்துறையில் ஆளணிப் பற்றாக்குறை உள்ளது என்றும் ஹஸன் அலி கூறினார். உடனடியாக ஒரு தொகுதி தாதிகளை வடக்கு-கிழக்கில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், அடுத்த கட்டமாக மருத்துவர்களை நியமிக்கும் பணி தொடங்கும் எனவும் ஹஸன் அலி உறுதியளித்தார்.