Breaking News

துறைமுக நகர கட்டுமானப் பணியைத் தொடர சீனாவுக்கு அனுமதி வழங்கியது இலங்கை!

கடல் அரிப்பினால் ஏற்படும் சேதங்களைத் தவிர்ப்பதற்காக, இடைநிறுத்தப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்ட கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக, துறைமுகங்கள், விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் தொடர்பாக சட்டமா ஜனாதிபதியிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின்போது, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த திட்டத்தின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடுவார்.

அதேவேளை, இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளை திடீரென இடைநிறுத்தியுள்ளதால், அரைகுறையாக கட்டப்பட்ட சில பகுதிகள் கடல் அரிப்பினாலும், கடும் மழையினாலும், கடுமையான காற்றினாலும் சேதமடைந்து வருகின்றன. இந்த திட்டம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்கள் சேதமடைவதைத் தடுப்பதற்காக, சில பகுதிகளில் கட்டுமானப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொழும்புத் துறைமுக நகர கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், நாளொன்றுக்கு 380,000 டொலர் இழப்பு தமக்கு ஏற்பட்டுள்ளதாக, சீன நிறுவனம் தெரிவித்திருந்த்து குறிப்பிடத்தக்கது.