Breaking News

மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 54 பேரையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 


இது குறித்து தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், 

பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பாக் நீரிணை அருகே தமிழக மீனவர்கள் அமைதியாக மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 54 மீனவர்களையும் அவர்களின் 10 படகுகளையும் விடுவிக்க நிச்சயமாக பிரதமரின் நேரடி தலையீடு அவசியமானது. 

மீனவர்களை விடுவித்தால் மட்டுமே இருநாட்டு மீனவர்கள் இடையிலான பேச்சு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றும், மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசை உடனடியாக தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 இதேவேளை தமிழக மற்றும் இலங்கை மீனவர்களிடையே நாளை சென்னையில் பேச்சு நடைபெறவுள்ள நிலையில், அதில் சுமூகத் தீர்வு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்களிடையே உள்ள நிலையில், இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.