ஆட்கடத்தல் விவகாரம்! முன்னாள் கடற்படை அதிகாரி கைது
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பாக, இலங்கை கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற உயர்அதிகாரி ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான தடுப்புக்காவல் உத்தரவு நீதிமன்றத்திடம் இருந்து கிடைக்கும் என்று நம்புவதாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
2008-2009 காலப்பகுதியில், நான்கு இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டிலேயே இந்த முன்னாள் கடற்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், கைது செய்யப்பட்ட இலங்கை கடற்படை உயரதிகாரியின் பெயர் இன்னமும் வெளியிடப்படவில்லை.
அதேவேளை, கொழும்பு , மற்றும் திருகோணமலையில், இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், இலங்கை கடற்படையின் சிறப்புக் குழுவொன்றை நிர்வகித்த கடற்படையின் முன்னாள் பேச்சாளரான, கப்டன் டி.கே.பி.தசநாயக்கவிடம் அண்மையில் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.