வடக்கில் உள்ள இராணுவம் தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? விக்கி கேள்வி
வடமாகாணத்தில் இருக்கும் இராணுவ முகாம்களை அகற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்மதிக்கின்றாரா? என்பது தொடர்பில் அறியத்தர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 26 ஆவது அமர்வு இன்று நடைபெற்றது. அவ்வமர்வில் இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு பிரதமர் வழங்கிய நேர்காணலில் நான் பொய் உரைப்பதாக கூறி இருந்தமை தொடர்பில் முதலமைச்சர் கருத்து கூறும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், பிரதமரை நான் சந்தித்து பேசிய போது வடமாகணத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற போவதில்லை என தான் மகாநாயக்க தேரர்களிடம் கூறப்போவதாக என்னை பார்த்து கூறியது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.
தற்போது பிரதமர் தான் அவ்வாறு கூறவில்லை என்றால் வடமாகணத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவது தொடர்பாக தற்போது அவரது நிலைப்பாடு என்ன என்பதனை அறியத்தர வேண்டும். இராணுவத்தை வடமாகணத்தில் இருந்து விரைவில் வெளியேற்றுவேன் என கூறினால் வடமாகாண மக்கள் பெரிதும் மகிழ்சி அடைவார்கள் என தெரிவித்தார்.