Breaking News

ரணிலின் நேர்காணல் திரிபுபடுத்தப்பட்டுள்ளது - சுவாமிநாதன் குற்றச்சாட்டு

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணலை இந்திய ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் திரிபுபடுத்தியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை சுடுவதற்கான அதிகாரம் கடற்படைக்கு உள்ளதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இது இரு நாட்டு இராணுவத்தினருக்கும் பொருந்தும்.

எல்லை தாண்ட வேண்டாம் என்றும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளியுங்கள் என்பதையும் பிரதமர் வலியுறுத்தியிருந்தார். இதனை புரிந்துகொள்ளாத இந்தியாவில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள சில அரசியல் கட்சிகள் மக்களை குழப்பி வேடிக்கை பார்க்க முனைகின்றனர். குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பாரத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்தச் செயலினால் இந்திய ஊடகங்களுக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது என்பதோடு அவர்கள் இலங்கை  – இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்த முயல்கின்றனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து பிரதமர் ரணிலிடம் எதுவும் கேட்கவில்லை. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதற்கு கவலை ஒன்றும் தெரிவிக்கவில்லை. காரணம் பிரதமர் ரணில் என்ன பேசினார் என்று அவர்களுக்கு தெரியும் என அமைச்சர் சுவாமிநாதன் கூறினார்.