Breaking News

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் மோடி

இலங்கைக்கு அடுத்தவாரம் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் நாள், இலங்கைக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். 1987ம் ஆண்டு, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி கொழும்புக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்துக்குப் பின்னர், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே ஆவார்.

இந்தியப் பிரதமர், வரும் 13ம் நாள் மாலை 5 மணியளவில், இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.இந்தியப் பிரதமர் ஒருவர், இலங்கை  நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளது இதுவே முதல்முறையாகும்.

கடந்த 2013ம் ஆண்டு தாய்லாந்து பிரதமர் யிங்லக் சின்வத்ரா இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, நாடாளுமன்றத்தில், சபாநாயகருக்கு அருகாக சிறப்பாக நாற்காலி ஒன்று அமைக்கப்பட்டு ஆசனம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்.


இலங்கை நாடாளுமன்றத்தில் தாய்லாந்து பிரதமராக இருந்த யிங்லக் சின்வத்ரா இந்தியப் பிரதமரின் உரை இடம்பெறும் போது அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வேணடும் என்று  பிரதமர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதற்கிடையே, இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர், யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ளார். இதன்போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயண ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நாளை கொழும்பு வரவுள்ளார். அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.