இலங்கைக்கு ஆப்பு வைக்கும் சீனா! சிக்காகோ பிரகடனத்தில் சிக்கல்
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை தொடர அனுமதிக்கப்பட்டால்,இலங்கை தனது வான் பிராந்தியத்தின் ஒரு பகுதியை சீனாவிடம் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கொழும்புத் துறைமுக நகரத் திட்ட உடன்பாட்டின்படி, சீனாவுக்கு நில உரிமை வழங்கப்பட்டால், அதற்கு மேலாக உள்ள வான் பிராந்தியமும், சீனாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும், விமானப் போக்குவரத்து அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பாக, 1944ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட சிக்காகோ பிரகடனத்தில் இலங்கை உள்ளிட்ட 191 நாடுகள் ஒப்பமிட்டுள்ளன. இந்தப் பிரகடனத்தின் 1வது மற்றும் 2வது, பிரிவுகளின்படி, கொழும்புத் துறைமுக நகரத்தில் சீனாவுக்குச் சொந்தமாக நிலம் வழங்கப்பட்டால், அதற்கு மேலாக உள்ள வான் பகுதியும் சீனாவுக்குச் சொந்தமானதாகவே இருக்கும்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்ட உடன்பாட்டின்படி, சீனாவுக்கு 108 ஹெக்ரெயர் நிலப்பரப்பு வழங்கப்படும். இதில் 88 ஹெக்ரெயர், 99 ஆண்டு குத்தகைக்கும், 20 ஹெக்ரெயர் சீனாவுக்குச் சொந்தமாகவும் வழங்கப்படும். சிக்காகோ பிரகடனத்தின் 1வது பிரிவில், ஒரு நாடு தனது பிராந்தியத்துக்கு மேலாக உள்ள வான்பரப்பில் தனியுரிமை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் இது குறித்து சுட்டிக்காட்டியுள்ளது புதிய அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்காகோ பிரகடனத்தை கவனத்தில் கொள்ளாமல் முன்னைய அரசாங்கம் எவ்வாறு சீனாவுடன் இந்த உடன்பாட்டுக்கு இணங்கியது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த திட்டம் பாதுகாப்பு ரீதியான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக, இந்தியா முன்னர் பிரச்சினை எழுப்பியிருந்தது. இந்தநிலையில், இந்த வான் பிராந்திய ஆதிக்க விவகாரம் இந்தியாவுக்கு பெரும் கவலையை அளிக்கும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.