அனைத்துலக மேற்பார்வையின் கீழேயே உள்ளக விசாரணை! - சுமந்திரன்
போர்க்குற்றங்கள் தொடர்பாக உள்ளக விசாரணை ஒன்று இடம்பெறுமானால், அது அனைத்துலக மேற்பார்வையின் கீழேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
‘காணாமல்போனோர் தொடர்பில் தேடியலையும் உறவுகள் வேறு எதனையும் கேட்கவில்லை. மாறாக தமது உறவுகளை மீட்டுத்தருமாறே மன்றாடுகின்றனர். காணாமல்போனோரை கண்டறிவதற்கென மக்ஸ்வெல் பரணகம தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, வெறும் கண்துடைப்புக்காக நிறுவப்பட்டது என்றே கருதுகின்றோம்.
இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் நாம் நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளோம். மேலும் இந்த ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கென நியமிக்கப்பட்ட சட்ட ஆலோசகரான டெஸ்மன் பெரேரா மீதும் எமக்கு நம்பிக்கை கிடையாது.
காணாமல்போனோரை கண்டறியும் வகையில் நியமிக்கப்பட்டதான இந்த ஆணைக்குழு முறையான உண்மைத்தன்மையுடனான விசாரணைகளை மேற்கொண்டிருக்கவில்லை. பாதுகாப்புத்தரப்பினரே தமது பிள்ளைகளை உறவுகளை கொண்டு போயிருப்பதாக பலரும் சாட்சியம் வழங்கியுள்ளனர் .
நிலைமை இப்படியிருக்க இலங்கை மீதான விசாரணை விடயம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணக்கம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ள புதிய அரசாங்கம், உள்ளக விசாரணைக்கு இணங்கியுள்ளது.
உள்ளக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படுமேயானால் அது அனைத்துலக மேற்பார்வையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.அதற்கான பொறிமுறை ஒன்று இங்கு உருவாக்கப்படுவது அவசியம் என்பதுடன் அனைத்துலக பிரமுகர்களை அனுமதிக்கும் நிலையும் உருவாக்கப்படுதல் அவசியமாகும்.
உள்ளக விசாரணை விடயத்தில் உண்மைத்தன்மை பேணப்படுவதன் மூலமே இந்நாட்டின் மீதான அழுத்தங்களில் இருந்தும் விடுதலையாக முடியும். மேலும் உண்மைத்தன்மையற்ற விதத்தில் செயற்பட முயற்சித்தால் முன்னைய அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நிலையே இன்றைய அரசுக்கும் ஏற்படும். எனினும் நாம் அதை விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.