Breaking News

நாளை பேரணி! வௌிநாடு பறந்தார் பிரசன்ன ரணதுங்க!

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் அமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அணியில் முக்கிய பங்கு வகித்த மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணத்துங்க அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். 

அந்த நாட்டு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவர் அங்கு சென்றுள்ளதாக, முதலமைச்சரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்குக் கொண்டுவருவது தொடர்பில் நாளை கண்டியில் பேரணி ஒன்று இடம்பெறவுள்ள நிலையிலேயே அவர் வௌிநாடு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக கடந்த மாதம் நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியிலும், பிரசன்ன ரணதுங்க மேல் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருடன் கலந்து கொண்டார். 

மேலும் நாளை நடைபெறவுள்ள பேரணி குறித்து தௌிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் கண்டியில் இடம்பெறவுள்ளது. இதில் பேரணியில் கலந்து கொள்பவர்கள் பற்றி தகவல் வௌியிடப்படும். இதன்படி நாளை இடம்பெறவுள்ள பேரணியில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.