பொதுத் தேர்தலில் இலங்கை தொழில்கட்சியில் போட்டியிடும் மகிந்த!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு தமக்கு அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால், அக்கட்சி அங்கத்துவம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஓர் அங்கத்துவக் கட்சி ஊடாகப் போட்டியிடுவதற்கு மஹிந்த முதலில் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால தற்போது தெரிவாகி இருப்பதனால் அந்தக் கூட்டமைப்பின் சார்பிலும் மஹிந்தவால் போட்டியிட முடியாமல் போகலாம் எனக் கருதப்படுகின்றது. இதனாலேயே இலங்கைத் தொழிற்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இது குறித்து இலங்கை தொழிற் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி.லியனகே கருத்து தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ஷவுடன் இது குறித்து பேசி வருகிறார் என்றும் விரைவில் ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்த அறிவித்தல் வெளியாகும் என்றும் கூறினார். இதேசமயம் மேல் மாகாணத்தின் மாகாண,மாநகர, பிரதேச சபைகளின் உறுப்பினர்களை நாளை மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.