Breaking News

இலங்கையில் இனவாத அமைப்புக்களை தடை செய்ய தீர்மானம்!

இலங்கையில் இனவாத அமைப்புக்களை தடை செய்ய புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றில் சட்டமூலமொன்றை கொண்டு வந்து, அதனூடாக இனவாத அமைப்புக்களை தடைசெய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைக் குறிப்பிட்டதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாட்டில் இடம்பெற்ற இன முரண்பாடுகள் தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சரிடம் வினவிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் செயற்பாடுகளை கடந்த அரசாங்கம் எவ்வாறு அனுமதித்தது எனவும் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, இனவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட்டால் அந்தப் பிரச்சினையை எவ்வாறு அணுகுவது என்பது தமக்குத் தெரியும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் வெளியிடும் கருத்துக்கள் குறித்து கவலைப்பட போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.