Breaking News

இந்தியாவுக்கு ஆப்பு வைத்தது இலங்கை!

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவையை அடுத்தவாரமே ஆரம்பிக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை  அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இருநாடுகளுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்பட்டது.

இந்தச் சந்திப்புக் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஏ.எம்.ஜே.சாதிக் கருத்து வெளியிடுகையில், அடுத்தவாரமே, இராமேஸ்வரம்- தலைமன்னார் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இந்தியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சரியான இறக்குதுறை வசதிகள் மற்றும் தேவையான வசதிகள் செய்யப்படாமல், பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என்று இலங்கை தரப்பில் பதிலளிக்கப்பட்டது.


தலைமன்னார் இறங்குதுறையை திருத்தியமைக்க கடனுதவி வழங்குவதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதற்கு இலங்கை தரப்பில், இராமேஸ்வரம் இறங்குதுறையும் நல்லநிலையில் இல்லாவிட்டால் இந்தக் கடனுதவியால் பயனில்லை என்று என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இரண்டு இறங்குதுறைகளிலும் இந்த வசதிகள் பயணிகளைக் கவர்வதற்கு அவசியமானது என்றும் இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதிலும் இந்தியா ஆர்வம் காட்டியது. ஆனால், அது வர்த்தக ரீதியாக இலாபம் தராது என்று இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தனியாரால் நடத்தப்பட்ட பயணிகள் கப்பல் சேவை இலாபமின்மையால் நிறுத்தப்பட்டதையும் இலங்கை தரப்பு சுட்டிக்காட்டியது.
எனினும், இரண்டு பயணிகள் கப்பல் சேவைகளையும் ஆரம்பிப்பதில் இந்தியாவும் இலங்கையும் ஆர்வம் காட்டுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.