Breaking News

ஜெனீவாவில் சுதந்தரமாக செயற்படும் அதிகாரம் எனக்கு தரப்படவில்லை! சமரசிங்க

ஜெனீவாவில் சுதந்திரமாக செயற்படுமளவுக்கு அதிகாரம் தன்னிடம் இருக்கவில்லை. கடந்த அரசாங்கத்தில் வெளிநாட்டுக் கொள்கையில் இருந்த சில குறைபாடுகளால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அழுத்தங்கள் ஏற்பட்டன என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியின் மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்புக்கான விசேட பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க இப்புதிய அரசாங்கத்தினால் ஐ.நா. அறிக்கை தாமதப்படுத்தப்பட்டமை வரவேற்கத்தக்கது என்றார்.


சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார், அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட இருந்த அறிக்கை தாமதப்படுத்தப்பட்டமை இந்த அரசாங்கத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இதனால் வழங்கப்படும் காலத்தில் முன்னேற்ற கரமான வேலைகளை செய்யமுடியும். மனித உரிமைகள் அரசில் இல்லை. அனைத்தும் பொதுநலன் கருதியே மேற்கொள்ளப்படும்.

யுத்தத்தினை நிறைவு செய்ய பல வழிகளிலும் இந்தியா உதவியது. ஆனால், இந்தியாவை நாம் மறந்துவிட்டோம். அதேநேரம் அமெரிக்காவின் ஆதிக்க குணத்தையும் மதிக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழுவில் இணைந்து கொண்ட அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மனித உரிமை விவகாரத்தில் அவ்வளவாக அக்கறை கொள்ளவில்லை. ஆனால், ஒபாமா அரசின் ஜனநாயக கட்சி மனித உரிமை விவகாரங்களில் முக்கிய கவனம் செலுத்தியது. இதற்கு ஐரோப்பா, ஆபிரிக்கா ஏனைய ஆசிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கின. ஆனால், இந்த விடயத்தை நாம் விளங்கிக்கொள்ளவில்லை.

ஆனால், ஐ.நாவின் பாதுகாப்புச் சபையிலிருக்கும் சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் எமக்கு ஆதரவு தந்தன. இருந்தபோதும், மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்திய தேர்தலில் திசைதிருப்ப முடியாமல் போனது. இதனை தெளிவாக அறியமுடிந்தது. முன்னாள் ஜனாதிபதியிடமும் நான் இதனைத் தெரிவித்தேன்.

எமது இராஜதந்திர சேவையில் அரசியல் ரீதியான நியமனங்கள் அதிகரித்து இருந்தன. லக்ஷமன் கதிர்காமர் காலத்தோடு ஒப்பிடும்போது 65% அரசியல் நியமனங்கள் கடந்த அரசில் இருந்தன. யுத்தத்துக்கு பின்னர் மனித உரிமை விவகார அமைச்சு ஒன்றை நாம் தவிர்த்தது பாரிய பிழை. 2014 ஆம் ஆண்டு நான் ஜெனீவாவுக்கு செல்லும்போது நிலைமை தலைகீழாக இருந்தது. எனக்கு வழங்கிய தற்காலிக அதிகாரங்களைக் கொண்டு சேவை செய்தேன்” என்றார்.