Breaking News

இலங்கையை உன்னிப்பாக கண்காணிப்போம்! சீனா தெரிவிப்பு

கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தை இலங்கை பொருத்தமான முறையில் தீர்க்கும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்த இலங்கை எடுத்துள்ள முடிவு குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங், பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

“இந்த நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு தகவல் அளித்துள்ளது. திட்டம் தற்காலிகமாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அது ரத்துச் செய்யப்படவில்லை என்றும் இலங்கை  கூறியுள்ளது. அத்துடன், இதுதொடர்பான தொடர் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சீனாவுடன் பரிமாறிக் கொள்வதாகவும், கலந்துரையாடுவதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளது.

ஏனைய நாடுகளுடன் தொடர்புடைய திட்டங்களையும் இலங்கை தரப்பு விசாரணை செய்வது தொடர்பாக நாம் கவனித்து வருகிறோம். இது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து நாம் நெருக்கமாக கண்காணிப்போம். இந்தப் பிரச்சினையை இலங்கை பொருத்தமான முறையில் தீர்க்கும் என்றும், சீன நிறுவனங்களின் உரிமைகளையும், நியாயமான நலன்களையும் பாதுகாக்கும் என்றும், நம்புகிறோம்.

அதேவேளை, இலங்கையின் தேசிய அபிவிருத்தியின் அடிப்படை நலன்களைப் பாதுகாக்க, இலங்கையில் சீன நிறுவனங்களின் முதலீடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.