Breaking News

நடைபயணமாக வந்தவர்களை தங்கவிடாது விரட்டிய பொலிஸார்

தமிழ்மக்களிற்கு நீதிவழங்குமாறு ஐ.நாவை வலியுறுத்தி முள்ளிவாய்க்காலில் இருந்து நடைபவனியாக யாழ்ப்பாணம் நோக்கி வரும் இளைஞர்களை நேற்றிரவு பொலிஸார் மிரட்டியுள்ளனர். நேற்றிரவை பரந்தனில் அவர்கள் தங்க முற்பட்டபோதும், அதற்கு அனுமதிக்காக பொலிசார் அவர்களை இயக்கச்சிக்கு விரட்டிவிட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் இருந்து நடைபவனியை ஆரம்பித்த இளைஞர்கள் நேற்றுமாலை பரந்தனை வந்தடைந்தனர். நேற்றிரவு அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்ற பொலிசார் தமது பொலிஸ்பிரிவிற்குட்பட்ட இடத்தில் தங்கியிருக்க முடியாதென கூறி, அவர்களை இயக்கச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், இன்றுகாலை திட்டமிட்டபடி பரந்தன் சென்று அங்கிருந்து நடைபவனியை ஆரம்பிக்கவுள்ளதாக இளைஞர்கள் அறிவித்துள்ளனர். இதேவேளை நேற்றும் இவர்கள் வழிநெடுகளிலும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் இவர்களை வழிமறித்த இராணுவத்தினர் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

நேற்றுமுன்தினம் இவர்கள் புதுக்குடியிருப்பிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோது, அந்த வீட்டை இராணுவத்தினர் சுற்றிவளைத்து அங்கிருந்தவர்களின் ஆளடையாளங்களை பதிவு செய்துள்ளனர்.