மைத்திரியின் தடையை மீறிய சுதந்திரக் கட்சியினர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வலி்யுறுத்தி, இரத்தினபுரியில் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி விதித்திருந்த தடையை மீறி, அந்தக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 28 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணிக் கட்சிகளால் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று மாலை நடந்த இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த தடையையும் மீறி, அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான குமார வெல்கம, சி.பி.ரத்நாயக்க, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே, றோகித அபேகுணவர்த்தன, பந்துல குணவர்த்தன, திலும் அமுனுகம, லோகான் ரத்வத்த, காமினி லொக்குகே, மனுச நாணயக்கார, உதித்த லொக்குபண்டார, விதுர விக்கிரமநாயக்க, கீதாஞ்சன குணவர்த்தன, வீரகுமார திசநாயக்க, செகான் சேமசிங்க, சாலிந்த திசநாயக்க, சிறியானி விஜேவிக்கிரம,ரி.பி.எக்கநாயக்க, உள்ளிட்டோரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன மற்றும் மேரல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட மாகாணசபை உறுப்பினர்கள் பலரும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை விதித்த தடையையும் மீறி இந்தக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பெருமளவில் பங்கேற்றதையடுத்து, மைத்தி்ரிபால சிறிசேன கடும் சவாலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபடும் நிலை ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.