ஐ.நாவின் கருத்துக்கள் எரிச்சலூட்டுகின்றன - டொனி அபொட்
தஞ்சம் கோரி வருபவர்களை ஆஸ்திரேலியா நடத்தும் விதம் குறித்து ஐநாவின் சித்ரவதைகளுக்கான சிறப்புத்தூதுவர் கூறியிருக்கும் கருத்துக்கள் தம்மை எரிச்சலூட்டுவதாக இருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் கூறியுள்ளார்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவின் நாட்டுக்கு வெளியேயான தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் நடத்தப்படும் விதம், சித்ரவதை குறித்த சர்வதேச சட்டங்களை மீறுவதாக இருப்பதாக ஐநா கூறியுள்ளது.
மனுஸ் தீவுகளில் உள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களின் நிலை குறித்து மனித உரிமைக் குழுக்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் திங்களன்று சமர்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையில், 60 நாடுகளில் சித்ரவதைகள் குறித்து சிறப்புத் துதுவர் ஜோன் மெண்டஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
போதுமான தடுப்பு முகாம் வசதிகளை செய்யாமை, சிறார்களை தடுத்து வைத்தல், மனுஸ் தீவுகளில் வன்செயல்கள், மனித நேயமற்ற வகையிலான நடத்தைகளை தடுக்க தவறியமை ஆகியவை குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது.