Breaking News

காணாமல் போன பலர் இரகசியத் தடுப்பு முகாம்களில்! முதலமைச்சர் தகவல்

வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து போர் நடைபெற்ற காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பலர் இலங்கையின் பல இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் இரகசியத் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்திருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் படையினரின் சப்பாத்துக்களைத் துடைப்பதற்கும் வேறு சில வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுவதாக தமக்குத் தெரியவந்திருப்பதாகவும், இந்த முகாம்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தாம் தெரியப்படுத்தியிருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

காணாமல்போனவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று யாழ். நகரில் மாவட்ட செயலகம் முன்பாக நேற்று நடைபெற்றது. தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி இவர்கள் போராட்டம் நடத்திவருகின்றார்கள். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அங்கு வந்திருந்த விக்னேஸ்வரன் உறவினர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போதே இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டார்.

விக்னேஸ்வரன் தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

“இலங்கையின் பல இடங்களில் குறிப்பாக மஹரகம, திருகோணமலை, அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் இரகசிய முகாம்கள் சில உள்ளதாகவும் காணாமல் போனவர்கள் பலர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் எமக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது. இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் படையினரின் சப்பாத்துக்களைத் துடைப்பதற்கும் இதர வேலைகள் சிலவற்றுக்கும் பயன்படுத்தப்படுகின்றார்கள்.

இது தொடர்பில் அரசாங்கத்துக்கும், தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கும் நாம் தெரியப்படுத்தியிருக்கின்றோம். இவ்வாறான முகாம்கள் இருப்பது தொடர்பில் உங்களுக்கு எவ்வாறு தெரியும் என அவர்கள் எம்மிடம் கேட்டார்கள். அதனையிட்டு நாம் அவர்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.

இவ்வாறு உள்ளவர்களை முதலில் அடையாளம் காண வேண்டும். அதன்பின்னர் அவர்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கலாம். இவை இரகசிய முகாம்கள் என்பதால் அவை தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க முடியாதுள்ளது. அதற்கு கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்.

இதனைவிட, சிறைகளிலும், நலன்புரி முகாம்களிலும் உள்ளவர்களை வெசாக் தினத்தன்று அதாவது மே 3 ஆம் திகதி விடுதலை செய்யுமாறு நாம் ஜனாதிபதியைக் கேட்டுள்ளோம். அந்த வகையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என நாம் நம்புகிறோம்.” இவ்வாறு முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.