கொழும்புத் துறைமுக நகரத் திட்டப் பிரச்சினை இன்னமும் தீரவில்லை!
1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சீனாவுடன் உள்ள பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்றும், இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பான அனுமதிகள் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால், சீனாவினால் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தை அடுத்து, இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சில தகவல்கள் வெளியாகின.
ஆனால், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த விவகாரம் குறித்து, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் கலந்துரையாடவில்லை என்று இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக பெறப்பட்ட அனுமதிகளை சமர்ப்பிக்குமாறு, சீன நிறுவனங்களுக்கு நாம் கால அவகாசம் வழங்கியிருந்தோம். ஆனால் அவர்கள் இன்னமும் அவற்றைக் கையளிக்கவில்லை.” என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.