Breaking News

ரவிராஜ் கொலையில் முக்கிய திருப்பம்! கொலைக்கு முன்னாள் கடற்படைத் தளபதியே காரணம்

கொழும்பில் இடம்பெற்ற படுகொலைகள் பலவற்றுக்கு முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவே காரணமாக இருந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பல கொலைகள் தொடர்பான தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவே கொலைகளைச் செய்யத் தனக்கு உத்தரவிட்டார் என கடற்படையைச் சேர்ந்த லெப்ரினன்ட் கொமாண்டரான நிலாந்த சம்பத் முனசிங்க குற்றப் புலனாய்வுப் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார். இத்தகவலை சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் குறித்து குற்றப் புலனாய்வுப் பொலிஸார் வசந்த கரன்னகொடவிடம் விசாரணை எதனையும் நடத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு நேற்றுப் புதன்கிழமை கொழும்பு நீதிமன்றில் இடம்பெற்றது. இந்த வழக்கில் ரவிராஜின் குடும்பத்தினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி முன்னிலையாகி வாதாடினார்.


இதன்போது நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் பாவித்த அறையில் இருந்து 7.62×25 துப்பாக்கி ரவைகள் -300, 7.62 மி.மீ. வெடிகுண்டுகள் -105, 9×18- வெடி குண்டுகள்- 32, 9 மி.மீ. ரக வெடிகுண்டுகள் 50 பல வங்கிகளில் சேமிப்பு வைத்திருப்பதற்கான புத்தகங்கள், காணாமல் போனவர்களின் தேசிய அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுக்கள், சிம் அட்டைகள் என 21 தடயப் பொருட்களை அதிகாரிகள் மீட்டனர்.ரவிராஜின் கொலை தொடர்பில் கைதாகியிருக்கும் பிரதான சந்தேக நபரான சம்பத் முனசிங்கவுக்கு தெஹிவளையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்ட விடயத்திலும் தொடர்பிருக்கிறது. சம்பத் முனசிங்கவுக்கு புலிகளுடன் தொடர்பிருக்கிறது என கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட  2009 ஆம் ஆண்டு பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்தார்.

அத்துடன் பல கொலைகளைச் செய்வதற்கு வசந்த கரன்னகொடவே உத்தரவிட்டார் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார். ஆனால் இந்த வாக்குமூலம் குறித்து இதுவரை வசந்த கரன்னகொடவிடம் எந்த விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும் ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் பலரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளையில் ரவிராஜ் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ரவிராஜ் 2006 ஆம் ஆண்டு கொழும்பு, நாரேஹென்பிட்டி பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். காரில் சென்றுகொண்டிருக்கும் போது பட்டப்பகவில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அந்த இடத்திலேயே அவர் கொல்லப்பட்டார்.