Breaking News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடன் பதிவு செய்யுங்கள் - மன்னார் ஆயர் கோரிக்கை

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவேண்டும். குறிப்பாக ஏனைய தமிழ்த் தேசிய தலைவர்களையும் உள்ளடக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்வதன் அவசியத்தை அவர்களிடத்தில் கூறியிருக்கின்றேன் என மன்னார் மாவட்ட பேராயர் வண பிதா ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இவாறு தெரிவித்தார். அவர் இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

“இதுதொடர்பாக நான் கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தேன். அத்துடன் தற்போதும் தமிழ்த் தலைவர்கள் அவ்விடயத்தை முன்னெடுக்கவேண்டும் எனக்கோருகின்றேன். குறிப்பாக தமிழர்கள் செறிவாக வாழும் எட்டு மாவட்டங்களில் உள்ள அரசியல் பிரநிதிகள் ஒன்றுபடவேண்டியது மிக முக்கியமானதாகும்.

அனைத்து தமிழ் தரப்புக்களும் ஒன்றுபட்ட ஒரு காத்திரமான பலமிக்க அரசியல் கட்சியாக இருப்பது சிங்கள அரசியல் சக்திகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். அவ்வாறில்லாது பிரிந்து தனித்தனியாக செயற்படுவதென்பது எமது எதிர்காலத்தை பலவீனப்படுத்துவதாக அமைந்து விடும். ஆகவே அரசியல் கட்சியாக பதிவு செய்வது என்பது மிகவும் முக்கியவிடயமொன்று என்பதுடன் இவ்விடயத்தை வலியுறுத்தியும் இச்சிந்தனையை வலுப்படுத்தியும் ஊடகவியலாளர்கள் செயற்படவேண்டும்” என்றார்.