மோடியின் கோரிக்கைக்கு இலங்கை அரசியல் மட்டத்தில் குழப்பம்!
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் அதிகாரங்களைப் பகிர்ந்து தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும்,விடுத்த வேண்டுகோள் குறித்து, அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
13வது திருத்தச்சட்டத்தை ஒரு தீர்வாக இலங்கை ஏற்றுக் கொண்டிருப்பதாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மோடியின் இந்த அழைப்பு சரியான நேரத்தில் விடுக்கப்பட்டுள்ளது என்று, நவசமசமாசக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார். 1987ம் ஆண்டு 13வது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்ட போதே, தமது கட்சி அதனை ஆதரித்ததாகவும், எனவே, இது ஒரு தீர்வாக அமையும் என்று தாம் நம்புவுதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜேவிபி அதற்கு எதிரான கருத்தை வெளியிட்டுள்ளது.
13வது திருத்தச்சட்டம் இந்தியாவினால் எம்மீது பலவந்தமாக திணிக்கப்பட்டது. இனப்பிரச்சினைக்கு இதனை ஒரு தீர்வாக நாம் பார்க்கவில்லை.இந்தப் பிரச்சினையை நேர்மையாகத் தீர்ப்பதற்கு தமிழ்மக்களுக்கு பரந்தளவிலான ஜனநாயகத்தை வழங்க வேண்டும்” என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சிங்களத் தேசியவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் இதே கருத்தையே வெளியிட்டுள்ளது.
13வது திருத்தச்சட்டம் இந்தியாவினால் தான் உருவாக்கப்பட்டு இலங்கை மீது திணிக்கப்பட்டது. மோடி தனது கருத்தை வெளியிடுவதற்குச் சுதந்திரம் உள்ளது. ஆனால், இலங்கையர்களால் தான் தீர்வை எட்டமுடியும். இது அவர்களுடைய பிரச்சினை” என்று ஜாதிக ஹெல உறுமயவின் போச்சாளர் நிசாந்த சிறீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.