Breaking News

ரணில்,மங்களவை அவசரமாக சந்தித்தார் சீனத் தூதுவர்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் இடை நிறுத்தியுள்ளதையடுத்து, சீனத் தூதுவர் யி ஜியான்லியாங், அவசரமாக இலங்கை பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது, சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்பாடுகள் வர்த்தக உடன்பாடுகளை மதித்து நடக்குமாறும், சீன முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்குமாறும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தகவலை கொழும்பிலுள்ள சீன துதுரகம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. இருநாடுகளுக்கும் நன்மை தரக்கூடிய உடன்பாடுகளை இலங்கை தொடர்ந்து மதித்து நடக்க வேண்டும் என்றும் சீனத் தூதுவர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கொழும்புத் துறைமுக நகர திட்டத்தை உடனடியாக இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும், வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வந்தன.

எனினும், சீன நிறுவனம் நேற்று விடுத்த செய்திக் குறிப்பில், தாம் பணிகளை இடைநிறுத்துவதாகவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், தெரிவித்திருந்தது. நேற்று முதல் துறைமுக நகர நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் அண்மைக்காலமாக எந்த நேரமும் பரபரப்பாக காணப்பட்ட காலி முகத்திடல் பகுதி தற்போது வெறிச்சோடிக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.