மஹிந்தவை றோ தோற்கடிக்கவில்லை - தமிழிசை
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். தமது உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். தமது அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பனவே இலங்கை தமிழர்கள் எதிர்ப்பார்ப்பவை என்று பாரதீய ஜனதாக்கட்சி தெரிவித்துள்ளது.
அந்தக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள தமிழர்கள் கொண்டிருக்கும் உரிமைகளை இலங்கை தமிழர்களும் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசியின் மூலம் இலங்கையின் ஆங்கில இணைத்தளத்துக்கு அளித்த செவ்வியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்திய புலனாய்வு அமைப்பான றோ தோற்கடித்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
மாற்றத்தை கோரிய தமிழர்களும் இந்தியாவில் ஏற்பட்ட அரசாங்க மாற்றமுமே மஹிந்தவை தோற்கடித்தன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கத்தை பொறுத்தவரையில் அது நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தமிழர் பிரச்சினையை தீர்க்காது போனால் அந்த நாடு பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னைய காங்கிரஸ் அரசாங்கம் 13ஆம் அரசியலமைப்பு தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.