இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா நடுநிலையாக செயற்பட வேண்டும்!
இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மூன்றாவது தரப்பு நடுநிலையாளராக இந்தியாவின் தலையீடு அவசியம், என்று உணர்வதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை வந்தடைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். இதன்போதே, மூன்றாந்தரப்பு நடுவராக இந்தியா செயற்பட வேண்டும் என்று கோரவுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “தமிழர்களின் பிரச்சினையை 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் தீர்த்து விட முடியாது என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துக் கூறவுள்ளோம். போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் இன்னமும் மீளக்குடி யேற்றப்படவில்லை. அவர்களை மீளக்குடியேற்றுவதற்கு, அவர்களின் நிலங்களில் உள்ள இலங்கை படையினர் அகற்றப்பட வேண்டும். இதுகுறித்தும் இந்தியப் பிரதமரிடம் சுட்டிக்காட்டவுள்ளோம்.
அத்துடன் இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை திருப்பி அழைப்பது, காணாமற்போனோரைக் கண்டறிவது, அரசியல் கைதிகள் விவகாரங்கள் குறித்தும் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடுவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.