வடக்கு, கிழக்கு மக்கள் பிரிவினைவாதிகளாம் - மகிந்த பிரச்சாரம்
தன்னைத் தோற்கடித்த வடக்கு, கிழக்கு மக்களைப் பிரிவினைவாதிகள் என்று அறிமுகப்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேடும் வகையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில். தம்மை வடக்கு, கிழக்கிலுள்ள மக்களே தோற்கடித்ததாக மகிந்த ராஜபக்ச ஊடகச் செவ்விகளில் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் தி ஹிந்து நாளிதழுக்கு அளித்திருந்த செவ்வியிலும், தாம் வடக்கு கிழக்கு மக்களை சரியாக கணிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், மீண்டும் அரசியலில் இறங்குவதற்காக எத்தனங்களில் ஈடுபட்டுள்ள மகிந்த ராஜபக்ச, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்மக்களுக்கு எதிரான உணர்வுகளை சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கும் வகையில் பரப்புரையில் இறங்கியுள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட, மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தக் கோரும், கூட்டத்துக்கு மகிந்த ராஜபக்ச அனுப்பிவைத்திருந்த செய்தியில், தன்னைத் தோற்கடித்தது பிரிவினைவாதிகளும், வெளிநாட்டு சக்திகளும் தான் என்று கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவினால் அனுப்பி வைக்கப்பட்டு, அவரது ஊடகப் பேச்சாளராக இருந்த மொகான் சமரநாயக்கவினால் வாசிக்கப்பட்ட செய்தியில், ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு சக்திகளும் பிரிவினைவாதிகளும் தம்மைத் தோற்கடித்த போதிலும் அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டினரின் சதி முயற்சி காரணமாக தோல்வியடைந்தோம். ஆனால் உங்கள் மனதிலிருந்து இன்று வரை தோற்கவில்லை. அரசியல் ரீதியாக எம்மை யாராலும் தோற்கடிக்க முடியாது என்பதனை எதிரிகளுக்கும் வெளிநாட்டினருக்கு அறிவிக்க விரும்புகின்றேன்.
எதனை இல்லாதொழித்தாலும் எமது ஆத்ம கெளரவத்தை இல்லாதொழிக்க முடியாது. இதனை நாம் எதிரிகளுக்கு புரிய வைக்கவேண்டும். பிரிவினைவாதிகள் எமது கொள்கைகளை இல்லாதொழிக்க முயற்சிக்கின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தம்மைத் தோற்கடித்தது வடக்கு,கிழக்கு மக்களே என்று கூறிவந்த மகிந்த ராஜபக்ச, இப்போது, அவர்களை சிங்கள மக்கள் முன் பிரிவினைவாதிகளாக அறிமுகப்படுத்த முற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.