தமிழில் தேசியகீதம் பாடுவதற்கு அனுமதி இல்லை!
இலங்கையின் அரச தேசிய நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசியகீதத்தை பாடுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று பௌத்தசிங்கள அடிப்படைவாதிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு எந்த தடையும் இல்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், அதற்கு சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, மேல் மாகாண சபை உறுப்பினரும், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில,
“தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடுவதற்கான சட்டபூர்வ உரிமையை நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருப்பது, புதிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் உள்ளடக்கப்படாத ஒன்று.
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கு நாம் ஒரு போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மறுபுறம் தேசிய ரீதியான அரச நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க போவது இல்லை. அவ்வாறு நடந்தால், அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வருவதற்கும் தயங்கமாட்டோம்.
உலகில், பல்வேறு மொழிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடுகள் ஒரு மொழியினை பிரதிநிதித்துவப்படுத்தியே தேசிய கீதத்தை பாடுகின்றன. இலங்கையில் இவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு சட்டத்தில் இடமும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், தமிழ்மொழியில் தேசிய கீதம் பாடுவது அரசியலமைப்புக்கு விரோதமான செயல் என்று தெரிவித்துள்ளார்.