Breaking News

சம்பூர் காணிகள் உரியவர்களிடம் கையளிக்கப்படும் - சுவாமிநாதன்

 திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மக்கள் இழந்த காணிகள் அடுத்த மாத இறுதியில் உரிமையாளர்களிடம் கைளிக்கப்படும் என்று புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக தற்காலிகமாக முகாம்களில் வாழும் சம்பூர் பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராயும் உயர்மட்டக் கூட்டமொன்று கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்டின் பெர்ணான்டோ தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மத்திய அமைச்சர் சுவாமிநாதன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாகாணக் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் மற்றும் மீள்குடியேற்ற அதிகாரசபையின் நிறைவேற்று இயக்குநர் ஹரீன் பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சம்பூர் பிரதேச மக்களின் காணிகளை மீளக் கையளித்தல், அவர்களது மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டு சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி. எம். சுவாமிநாதன், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி திருகோணமலை மாவட்டத்தில் முன்னைய அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த 1200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்படும் என்றார்.

சம்பூர் பிரதேசத்தில் முதற்கட்டமாக அரச முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காக அடையாளமிடப்பட்டு தனியார் துறையினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள 812 ஏக்கர் நிலமும் அடுத்த மாதம் 20ம்- 30ம் திகதிகளுக்கு இடையில் உரிமையாளர்களிடம் மீள கைளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதற்கு முன்னதாக, உரிய நிறுவனத்திடமிருந்து காணியை மீளப் பெறுதல், உரிமையாளரின் பெயரில் மீளப் பதிவு செய்தல் மற்றும் காணி அமைச்சரின் கையொப்பம் பெறுதல் என நிர்வாக மட்டத்திலான அலுவல்கள் யாவும் எதிர்வரும் 7ம் திகதிக்கு முன்னதாக பூர்த்தியடைந்து விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடற்படை முகாம் மற்றும் கடற்படையின் உயர் பாதுகாப்பு வலயமாக அடையாளமிடப்பட்டுள்ள 237 ஏக்கர் காணி தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை தலைமை அதிகாரியுடன் இணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்தக் காணிகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் அந்தக் காணிகளும் கிடைக்கும் என்று அமைச்சர் உறுதிபட பதிலளித்தார்.

சம்பூர் பிரதேச மக்களின் மீள் குடியேற்றத்தின் பின்னர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆரம்ப உதவியாக தனது அமைச்சினால் 50 ஆயிரம் ரூபா ஆரம்ப நிதியுதவியும் 6 மாதத்திற்கு தேவையான உலர் உணவு நிவாரணமும் வழங்கப்படும் என்றும் என்றார் அமைச்சர்.

தொடர்ந்து அந்த மக்களுக்கு உதவ ஐநா அமைப்புகளும் சர்வதேச அமைப்புகளும் உதவிகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் கூறினார்.