Breaking News

ஆயுத விற்பனை விவகாரம்! இலங்கை தூதுவர் தலைமறைவு

உக்ரைனிலுள்ள ரஷ்ய ஆதரவுப் படைகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தலைமறை வாயிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தகவலை வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா சிங்கள ஊடகமொன்றுக்கு இன்று காலை வழங்கிய நேர்காணலின்போது வெளியிட்டுள்ளார்.

தூதுவராக கடமையாற்றிய பின்னர் பதவி விலகும்போது மேற்கொள்ளும் சம்பிரதாய நடவடிக்கைகளில் ஒன்றையும் அவர் இதுவரை செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஆயுத விற்பனை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவிலிருந்து நாடு திரும்பியவுடன் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் முன்னாள் தூதுவர் உதயங்கவினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கைகள் இதுவரை வெளியாகாதிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உக்ரைன் அரசாங்கத்தினால் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

அவ்வாறு ஆயுத விற்பனை இடம்பெற்றிருந்தால் அந்த செயற்பாடானது இலங்கை மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு முரணானது என வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.