விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் - பொ.ஐங்கரநேசன்
விடுதலைப் புலிகள் சூழல் பாதிப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் கரையோர வளங்களை நல்முகாமைத்துவம் செய்வது தொடர்பான ஆய்வுப்பட்டறை ஒன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள சேவாலங்கா கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுப்பட்டறையில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கரையோரச் சூழல் இன்று மிகவும் மோசமான பாதிப்புகளுக்குள்ளாகி வருகின்றது. எமது கழிவுகளைக் கொட்டுகின்ற இடமாகக் கரையோரங்களையே பயன்படுத்தி வருகிறோம். கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் கடலுக்குள்ளேயே விடப்படுகிறது. கண்டற்காடுகளும், பவளப்பாறைகளும் கபளீகரம் செய்யப்படுகின்றன. மணல் மேடுகள் சூறையாடப்படுகின்றன. அளவுக்கு மிஞ்சிய மீன்பிடியாலும் றோலர் போன்ற பொருத்தமற்ற மீன்பிடி முறைகளாலும் காலநிலை மாற்றத்தாலும் மீன் இனங்கள் ஏற்கனவே அழியத் தொடங்கியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கரையோரச் சூழலில் ஏற்படும் பாதிப்பு மீன்களின் பெருக்கத்தை மேன்மேலும் பாதிக்கச் செய்கிறது. இதனால் மீன்பிடியைத் தொழிலாகக் கொண்ட கரையோர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இது பல்வேறு வகையான சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு வழிகோலுகிறது. இவை நிகழ அனுமதிக்கக் கூடாது. ஆனால், இவற்றைத் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ சூழலியற் சட்டங்கள் போதுமானவை அல்ல. இலங்கையில் சூழல் பாதுகாப்புத் தொடர்பான ஏராளமான சட்டங்களை மத்திய அரசு கொண்டிருக்கின்றது.
ஆனால், இவற்றை அமுல்படுத்தவிடாது அதிகார பலமும் அரசியற் பின்புலமும் குறுக்காக நிற்கின்றன. இதனால்தான் இன்றளவும் சட்டவிரோத மணல் அகழ்வும், கருங்கல் அகழ்வும், காடழிப்பும் பெருமளவில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்குரிய போதுமான அதிகாரங்கள் மாகாணசபையிடம் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிடுவது அவசியம். விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புக் குறித்துக் கூடுதலான கரிசனை கொண்டிருந்தார்கள். 1994 ஆம் ஆண்டு கண்டல் காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான சட்டம் ஒன்றை நிறைவேற்றியிருந்தார்கள். பொதுமக்கள் இந்தச் சட்டத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். அந்தக் காலப்பகுதியில் கண்டி வீதி மூடப்பட்டிருந்தது. குடாநாட்டுக்கு வன்னியில் இருந்து விறகுகளை எடுத்துவர முடியாததால், பொதுமக்கள் தங்கள் விறகுத் தேவைகளுக்காகக் கண்டல் மரங்களை வெட்ட ஆரம்பித்திருந்தார்கள்.
விடுதலைப் புலிகள் கண்டல் மரங்களை வெட்டுவதை அப்போது தடைசெய்யாதிருந்தால், வடமராட்சி கிழக்கில் இப்போது கண்டல் காடுகள் இருந்திருக்காது. இது சூழலை முகாமை செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான முடிவுகளை மேற்கொண்டு அமுல்படுத்துவதற்கு பிராந்திய அளவில் இறுக்கமான ஓர் அரசியல் நிர்வாகக் கட்டமைப்பு அவசியம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஆனந்த மல்லவதந்திரி, திட்டஇணைப்பாளர் அர்ஜன் ராஜசூரியா, கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் த.ஜெயசிங்கம், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.சர்வேஸ்வரன் ஆகியோருடன் பிரதேச செயலர்களும் கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்