இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
இலங்கை அரசாங்கத்துடன் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடும் நோக்கில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் இந்த ஆண்டு நடுப்பகுதியில் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகப் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட மனோகர் பரிக்கர், வரும் 30ம் நாள், தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை ஜப்பானுக்கு மேற்கொள்ளவுள்ளார். இதையடுத்து, அவர் பல்வேறு நாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
வியட்னாம், சீனா, அமெரிக்கா, மாலைதீவு, இஸ்ரேல், ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அவரது பயணத் திட்டத்தில் உள்ளடங்கியுள்ளன. தற்போது இந்தியப் பாதுகாப்பு அமைச்சும், வெளிவிவகார அமைச்சும், இணைந்து, மனோகர் பரிக்கரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான ஒழுங்குபடுத்தலில் ஈடுபட்டுள்ளன.
இதில், இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன், பாதுகாப்பு உடன்பாடு செய்து கொள்ளும் திட்டமும் உள்ளது. வரும் ஜூலை மாதமளவில், அவர் இலங்கைக்கு வந்து பாதுகாப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன