Breaking News

பிரதமர் நிகழ்வுகளில் முதல்வர் கலந்து கொள்ளாமை கவலையளிக்கின்றது - விஜயகலா

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பங்கேற்காமல் இருப்பது கவலையளிப்பதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 2000 ரூபாய் பெறுமதியான போஷாக்கு பொதிகளை வழங்கும் நிகழ்வு, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், அவர் கலந்து கொள்ளவில்லை. அவருடன் வடமாகாண அமைச்சர்களும், வடமாகாண உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் இணைத்ததாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு முதலமைச்சர் கட்டாயம் வருகை தந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வருகை தராதது எனக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.

அவர்கள் வருகை தராமையானது தெற்கு அரசு இங்கு வடமாகாணத்தில் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இடமளிப்பதாக அமையும். என்ன கோபதாபங்கள் இருந்தாலும் அதை பொது நிகழ்வுகளில் முன்னிறுத்தாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.