அனைத்துலக விசாரணைக்கு எதிராக இலங்கை முழுவதும் ஒன்றுபட்டு நிற்கிறது -சந்திரிகா
இலங்கையில் 26 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த அனைத்துலக விசாரணைகளுக்கு எதிராக, இலங்கை முழுவதும் ஒன்றுபட்டு நிற்பதாக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.
டுபாயில் நடைபெறும் கல்வி தொடர்பான அனைத்துலக கருத்தரங்கில் பங்கேற்றுள்ள அவர், பிரித்தானியாவின் ஐபி ரைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“ஐ.நா தலைமையிலான அனைத்துலக விசாரணைக்கான அழைப்பை, இலங்கை மக்களும், அரசியல்வாதிகளும் அவமானமாக கருதுகின்றனர். தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு ஐ.நாவிடம் இலங்கை கோரியுள்ளது.ஆனால், விசாரணை உள்நாட்டு மட்டத்திலேயே இடம்பெறும்.
ஒட்டுமொத்த நாடுமே, அனைத்துலக விசாரணையை தேவையற்றதாக கருதுகிறது.ஏனென்றால், இது, வெளிப்படையான விசாரணை ஒன்றை எம்மால் சொந்தமாக நடத்த முடியாது என்று, இலங்கை அரசாங்கத்தை இழிவுபடுத்துவதாக இருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.