Breaking News

மீள்குடியமர்வை ஆரம்பிக்க யாழ். வருகின்றார் ஜனாதிபதி

மயிலிட்டி கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும், வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச மீள்குடியமர்வு நடவடிக்கைகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பிப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க இருவரும் எதிர் வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளனர். 


 இந்த நிகழ்வுகள் வளலாயில் இடம்பெறவுள்ளன என்றும், அதற்குரிய ஏற்பாடுகள் யாழ். மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

 வலி.வடக்கு வலி. கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் ஆயிரத்து நூறு ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர் மானித்திருந்தது. எனினும் தற்போது வளலாய் மற்றும் வசாவிளான் கிழக்கு இரு கிராமசேவை யாளர்பிரிவுகளிலுமே மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். வளலாய் கிராம சேவையாளர் பிரிவு மக்கள் தமது காணிகளைச் சென்று பார்வையிடுவதற்கு கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வசாவிளான் கிழக்குப் பகுதியைப்பார் வையிடுவதற்கு நாளையிலிருந்து அனுமதி வழங்கப்படவுள்ளது. வளாயில் பார்வையிட அனுமதிக்கப் பட்ட 233 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் வசாவிளானில் பார்வையிட அனுமதிக்கப்படவுள்ள 197 ஏக்கர் நிலப்பரப்புமாக மொத்தம், 430 ஏக்கர் நிலப் பரப்பையும் மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வ மாகக் கையளிக்கும் நிகழ்வே எதிர் வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. 

 திங்கள்கிழமைக்குப் பின்னர், மேற்படி இரு கிராம சேவையாளர் பிரிவு களையும் சேர்ந்த மக்கள் தமது பகுதிகளில் குடியமர முடியும். மயிலிட்டிப் பிரதேசத்தில் மக்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது. இதற் குரிய உத்தியோகபூர்வ அறிவிப்பை, எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி விடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதேவேளை, இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளுவார் என்று மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் தெரிவித்துள்ள போதும் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் நிகழ்ச்சித் திட்டம் எதுவும் இல்லையயன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடகப் பிரிவினர் தெரிவித்தனர்.