மஹிந்தவின் உண்மைகளை அம்பலப்படுத்தினார் மைத்திரி
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்குத் கொண்டுவருவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 400 மருந்துக்கம்பனிகளிடமிருந்து தலா 25 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்டார்.
அத்துடன் சட்ட வரைஞர் திணைக்களத்தின் பிரதானியை ஓய்வுக்குள்ளாக்கியதுடன் சட்டவரைபும் அது ஒழுங்கமைக்கப்பட்ட கணினியும் கூட காணாமல்போகச் செய்யப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஊழல் மோசடிகள் தொடர்பில் அமைச்சர்கள் வாய் திறக்க வேண்டாம் என்றும் கணக்காய்வாளர் நாயகம் பார்த்துக்கொள்வார் என்றும் மஹிந்த ராஜபக் ஷ பணித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அவரது ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை என்னுடன் செயற்பட்ட அன்புக்குரிய அமைச்சர்கள் மனச்சாட்சியுடன் நினைத்துப்பார்க்க வேண்டும். அவரது செயற்பாடுகள் நியாயபூர்வமாக அமைந்திருந்தால் நான் ஜனாதிபதியாகியிருக்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்காது என்றும் ஜனாதிபதி கூறினார்.
மேலும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் சட்டமாக்கப்பட்டதன் பின்னர் அமைக்கப்படுகின்ற அதிகார சபைக்கு மிகவும் நேர்மையான பிரதானிகளையும் பணிப்பாளர்களையும் நியமிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி நாட்டு மக்களின் நன்மை கருதி 45 வருடங்கள் கழித்தேனும் பல்வேறு முட்டுக்கட்டைகளுக்குப் பின்னர் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட மூலத்துக்கு சகலரும் ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது சுகாதார அமைச்சரினால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்ட மூலம் மீதான இரண்டாம் வாசிப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்றுக்காலை 10.35க்கு பாராளுமன்றத்தில் பிரசன்னமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் பாராளுமன்றத்தில் முதல் தடவையாக உரையாற்றியதுடன் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரைகளை செவிமடுத்ததன் பின்னர் நண்பகல் 12.00 மணியளவில் சபையிலிருந்து வெளியேறினார்.
முன்னதாக விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறுகையில் 45 வருடங்களுக்கும் மேலாக உரையாடல்களுக்குள் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதையிட்டும் அதன் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுவதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். எமது 100 நாள் வேலைத்திட்டத்தில் மேற்படி சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நாம் உறுதியளித்திருந்தோம். எனினும் மேற்படி சட்டமூலமானது ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் அது எமது கரங்களுக்கு கிட்டியிருக்கவில்லை. என்னை ஜனாதிபதியாக்கியமை தொடர்பில் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். என்னைத் தெரிவு செய்ததால்தான் இச்சட்ட மூலம் பாராளுமன்றத்துக்கு வந்திருக்கிறது.
இச்சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டிருப்பதன் பின்னணியொன்றும் வரலாறு ஒன்றும் இருப்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இற்றைக்கு 45 வருடங்களுக்கு முன்பதாக மனித நேயம் மிக்கவரும் போற்றுதற்குரியவருமான சிறந்த மனிதன் பேராசிரியர் சேனக்க பிபிலே இச்சட்ட மூலம் தொடர்பில் பெரிதும் பிரயத்தனங்களைக் கொண்டிருந்தார். அவரால் சிந்திக்கப்பட்டதும் அவரது கொள்கையுமானதான தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை எனும் விடயமானது இன்று தேசிய கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சராக கடமையேற்றதன் பின்னர் பேராசிரியர் சேனக்க பிபிலேயின் கொள்கை வகுப்புத்திட்டம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தேன். எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவும் சுகாதார அமைச்சராக இருந்த கால கட்டத்தில் அதில் கவனம் செலுத்திருந்தார்.
இருந்த போதிலும் இச்சட்ட மூலம் சட்டமாக்கப்படுவதற்கு பல தடைகள் இருந்ததைக் கூற வேண்டும். இச்சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காதிருப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஹபக்ஷ சுமார் 40 மருந்துக் கம்பனிகளிடம் தலா 25 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார். அது மாத்திரமன்றி சட்டமூலம் இல்லாது செய்யப்பட்டிருந்தது. அத்துடன் சட்ட வரைஞர் திணைக்களத்தின் பிரதானி ஓய்வுக்குள்ளாக்கப்பட்டிருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக சட்டமூலம் வடிவமைக்கப்பட்ட கணிணி இயந்திரம் கூட இல்லாது செய்யப்பட்டிருந்தது.
மருந்து கம்பனிகள் உள்ளிட்ட விடயங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதை நாம் மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறினோம். ஆனாலும் ஊழல் மோசடிகள் தொடர்பில் அமைச்சர்கள் எதுவும் பேசத்தேவையில்லை என்றும் அது குறித்த கணக்காய்வாளர்கள் நாயகம் பார்த்துக்கொள்வார் என்றும் கூறி விட்டார்.
சட்ட வரைஞர் திணைக்களத்தின் முன்னைய பிரதானியானவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வைத்தியராவார். இவரும் ஜனாதிபதியை போன்றே செயற்பட்டு வந்தார்.இவ்வாறான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்ட போது அமைச்சர்களுக்கு வழங்கும் அந்தஸ்து அங்கு இல்லாது செய்யப்பட்டது. இதனால் அமைச்சர்கள் கையாலாகாதவர்கள் என்ற முடிவிற்கு அதிகாரிகள் வந்தனர். இப்படியான நிலைமையொன்று உருவாக்கப்பட்டால் அமைச்சர்களின் நிலைமை மனோநிலை எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஊழல் மோசடிகள் தொடர்பான விடயங்களில் அமைச்சர்கள் தலையிட வேண்டாம் என்று கூறப்பட்டதால் அது அதிகாரிகளுக்கு சாதகமாகவும் ஆகிப்போனது. முன்னைய அமைச்சர்கள் சுதந்திரமாக சுயாதீனமாக செயற்பட்டீர்களா என்பதை மனச்சாட்சியுடன் நினைத்துப்பாருங்கள். இந்த நிலைமைகள் சரி செய்யப்பட்டிருந்தால் நேர்மை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் நான் ஜனாதிபதியாக ஆகியிருக்கமாட்டேன். எனது அன்புக்குரிய முன்னாள் அமைச்சர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதன் மூலம் மக்கள் நன்மையடைகின்றனர். நிறைவான இலவச சுகாதார சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றனர்.
சட்ட மூலம் தொடர்பில் திருத்தங்கள் இருந்தால் அதனை உள்வாங்க முடியும். கடந்த காலங்களில் மலிந்துகிடந்த ஊழல் மோசடிகள் நாட்டில் துர்நாற்றமாய் வீசியதை மக்கள் நன்கறிவார்கள்.
இந்நிலையில் மேற்படி சட்ட மூலம் இங்கு கொணடு வரப்படுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உதவியாக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
அத்துடன் இல்லாது செய்யப்பட்டிருந்த இச்சட்ட மூலத்தை மீண்டும் புதுப்பித்தல் வரையில் இரண்டு வாரங்களுக்குள் உருவாக்கித்தந்த சட்ட வரைஞர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் நன்றியினை தெரிவிக்கும் அதேவேளை சட்டமூலம் சட்டமாக்கப்பட்டு அதிகாரசபை நிறுவப்படும் போது அதன் தலைவராகவும் பணிப்பாளராகவும் நியமிக்கப்படும் அதிகாரிகள் மிகவும் நேர்மைத்தன்மையுடையவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்துகின்றேன். அவ்வாறானவர்களை அமைச்சர் நியமிப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
மேலும் அதிகார சபை நிறுவப்பட்டதன் பின்னால் அனைத்து மருந்து வகைகளும் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து வகை வாசனை திரவியங்களும் சபையின் அதிகாரத்துக்குள் கொண்டு வரப்படுகின்றன.
மேலைத்தேய மருந்து வகைகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் அளவில் செயற்பாடுகள் அமைதல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.இதேவேளை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட 24 மணித்தியாலத்துக்குள் மக்கள் நன்மைகளை அனுபவித்து விட முடியாது.
அதற்கடுத்ததாகவும் வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. நாட்டு மக்களின் நலனை கருதிய இச்சட்ட மூலத்துக்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற ரீதியில் சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மக்களின் சுகாதார சேவையை திடசங்கற்பமாக கொண்டுள்ள இத்திட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன் என்றார்.