துறைமுக நகரத் திட்டம்! சீனாவுக்கு வாக்குறுதி கொடுக்கவில்லை – இலங்கை
சர்ச்சைக்குரிய கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று, சீன ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, சீன அமைச்சரை மேற்கொள்காட்டி வெளியான செய்திகளை இலங்கை நிராகரித்துள்ளது.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நேற்று நடத்திய பேச்சுக்களை அடுத்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியான்சோ, பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டதும், துறைமுக நகரப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா, அத்தகைய எந்த வாக்குறுதியும் அளிக்ப்படவில்லை என்று குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக இருநாடுகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட போதிலும், துறைமுக நகரத் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க அனுமதிப்பதாக, இலங்கை ஜனாதிபதி வாக்குறுதி ஏதும் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியான பின்னர், இதுகுறித்து தாம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தொடர்பு கொண்ட பேசியதாகவும், அத்தகைய வாக்குறுதி ஏதும் கொடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்ததாகவும், இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.