Breaking News

மைத்திரியின் ஆட்சியை கவிழ்க்க கோத்தா வீட்டில் சதித்திட்டம்! அம்பலப்படுத்தினார் அசாத் சாலி

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வீட்டில் சதித்திட்டமொன்று வகுக்கப்பட்டிருப்பதாகவும், இதில் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி.

இந்த சதி ஆலோசனை கடந்த திங்கட்கிழமை இரவு நடந்ததாகவும், இதில் சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரியவருகிறது. நேற்று தனது இல்லத்தில் அவசர செய்தியாளர் சந்திப்பை நடத்தி இந்த அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

“மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தினேஷ் குணவர்த்தன போன்றோர் பின்புலத்தில் இருந்து செயற்படுகிறார். இந்தநிலையிலேயே கடந்த திங்கள்கிழமை இரவு இந்த சதித்திட்டம் நடந்துள்ளது. அதில் கலந்து கொண்டவர்கள் பற்றிய விபரத்தை இரண்டுநாளில் வெளியிடுவேன். ஜனநாயகவழியில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கவிழ்க்கும் சதித்திட்டம் இங்கு தீட்டப்பட்டது. சுதந்திரக்கட்சியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சிலர் இதற்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளனர்.

இந்தக்கூட்டம் நடப்பதற்கு சற்று முன்னர்தான் அமைச்சுப்பதவியை ஏற்றுக் கொண்ட லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தனது நியமனக்கடிதத்தை கிழித்தெறிந்துவிட்டு வெளியேறப் போவதாக கூறியுள்ளார். இது பற்றி அரசு விழிப்படைந்துள்ளது. இந்த சதிபற்றி ஆராயுமாறு புலனாய்வுப்பிரிவிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மைத்திரி ஆட்சியை கவிழ்க்க எந்த தீயசக்திக்கும் இடமளிக்க மாட்டோம். விமல், கம்மன்பில, கோத்தபாய போன்றோர் கனவு காண்கிறார்கள். அவர்கள் கனவு ஒருபோதும் பலனளிக்காது” என்று தெரிவித்தார்.