சீனாவுக்கு இலங்கை எச்சரிக்கை!
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தா விட்டால், சீன நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய 1.5 பில்லியன் டொலர் முதலீட்டில், கொழும்புத் துறைமுக நகரை நிர்மாணிக்கும் பணியில் சீன அரசுத்துறை நிறுவனமான, சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
எனினும் இந்த உடன்பாடு, சட்ட நடைமுறைகளை மீறியும் சுற்றாடல் பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளாமலும், செய்து கொள்ளப்பட்டதாக கூறி,இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த திட்டத்தை மீளாய்வு செய்து வருகிறது.
இந்த விசாரணைகள் முடியும் வரையில், கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு சீன நிறுவனத்திடம் இலங்கையின் முதலீட்டுச்சபை கடந்தமாதம் கேட்டிருந்ததாக, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்தார். எனினும் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், துறைமுக நகர நிர்மாணப் பணிகளை சீன நிறுவனம் துரிதப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கபீர் காசிம், “அவர்கள் அதனை நிறுத்த வேண்டும். இந்த விசாரணைகள் முடியும் வரை, துறைமுக நகர நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை இலங்கையின் துறைமுகங்கள் அமைச்சு மேற்கொள்ளும்.
அவர்கள் அதனை நிறுத்தாவிட்டால், மேலதிக நடவடிக்கைகள் எதையும் எடுக்க முடியாத வகையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித்தார். இதுகுறித்து சீன நிறுவனத்திடம் இருந்து கருத்து எதுவும் வெளியாகவில்லை.