மைத்திரிக்கு அறிவுரை கூறும் மஹிந்த!
ஜனாதிபதி சிறிசேனவை திட்டியவர்கள் தற்போது அவரிடத்திற்கு சென்று தன்னை திட்டுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனால், ஜனாதிபதி மைத்திரி இந்த பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்த பாடத்தை கற்றுக்கொள்வது சிறந்தது என எண்ணுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். சுற்றி இருந்து கொண்டு தவறாக வழி நடத்துபவர்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரம் குருந்தன்குளம் பிரதேசத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவின் வீட்டில் நேற்று தன்னை சந்திக்க வந்தவர்கள் மத்தி்யில் பேசும் போதே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நாட்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அதேபோல் எனக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். நாமல், யோஷித்த, ரோஹித்த ஆகிய எனது பிள்ளைகள் அனைவருக்கும் எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அந்த குற்றச்சாட்டுக்களை இன்னும் விசாரிக்கின்றனராம்.
நான் மாளிகைகளை கட்டியதாக கூறுகின்றனர். இறுதியில் அவர்களே அதனை பொறுபேற்க நேர்ந்தது. நான் மாத்திரமல்ல, அமைச்சரவை அனுமதி வழங்கிய அனைத்து திட்டங்களுக்கும் அமைச்சர்கள்“ பொறுப்புக் கூறவேண்டும்.
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நான் பிளவுபடுத்துவதாக கூறுகின்றனர். யார் பிளவுப்படுத்தினர்?. பிரிந்து சென்று யாருக்கு எதிராக போட்டியிட்டனர்?. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டனர்.
தோற்ற வேட்பாளர் தோற்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றுவதற்காக நாங்கள் கட்சியை ஒப்படைத்தோம். நாட்டு மக்கள் வழங்கும் ஒத்துழைப்புகள் அன்றும் இன்றும் என்றும் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.